கோவை: தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மக்கள் “உடைத்தெறிந்துள்ளனர்” என்று கடலூர் காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம் மாநிலத்தை இனி பொலிவான பாதையில் கொண்டு செல்லும் என்றார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பிரச்னை ஏற்பட்டபோது முதலில் ஆதரவு கரம் நீட்டியவர் ராகுல் காந்தி என்றும் கூறினார்.

முந்தைய ஆட்சியில் கனிமவளக் கொள்ளை மற்றும் ஊழல் அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், இனி அது நடக்காது; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் கூறியதை நினைவூட்டினார்.

காங்கிரஸ் துரோகம் செய்ததாக வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், மாறிமாறி ஆட்சி செய்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. மூன்றாவது சக்தி வந்ததும் உடனடியாக இணைவதற்கு முடிவு செய்ததாக கூறி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் முடிவெடுத்ததாக வாதிட்டார்.