தமிழக வெற்றிக் கழகம் (தவெக)க்கு ஆதரவு தெரிவித்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜை, அமமுகவில் இருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை அறிவித்தார்.
மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்டு காமராஜ் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே, தவெகவுக்கு ஆதரவு கடிதம் அளித்ததாக கூறப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.
அப்போது, தங்கள் கட்சி எம்எல்ஏவை கடத்திவிட்டதாகவும், நடிகர் விஜய் ‘குதிரை பேர’ அரசியல் நடத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி, இது தொடர்பாக கவர்னரிடம் நேரடியாக புகார் அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் காமராஜ் இன்று பேசும்போது தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்தது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது எனக் குறிப்பிட்டு, காமராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீக்கம் குறித்து காமராஜ் பேசுகையில், சட்டமன்றத்தில் முதல்வரைப் புகழ்ந்து பேசுவது தவறா என கேள்வி எழுப்பினார். கட்சி நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்றும், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் கூறினார்.





