புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்டவற்றுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
தெலுங்கானாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசிய சூழலை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இதன் மூலம் அன்னிய செலாவணியை சேமிக்கவும், போர் காரணமான பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துகள் பல்வேறு தரப்புகளில் விவாதத்தை ஏற்படுத்தி, பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியது. இதையடுத்து, மேற்காசிய போர்ச்சூழல் குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு பெட்ரோலியத் துறை இணைச் செயலர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம், இந்தியாவின் எரிசக்தி தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் பகுதிகளில் பதற்றம் இருந்தாலும், எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர்வதாக கூறினார். கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்டவற்றுக்கு போதுமான இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலகளவில் எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் கூட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் விலை உயர்வு செய்யப்படவில்லை எனவும் கூறினார். இதற்கிடையே, ஈரான் எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய தேசியக்கொடியுடன் எரிபொருள் ஏற்றி வந்த 10 கப்பல்களுக்கு கூடுதல் கட்டணம் இன்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை பாதுகாப்பாக விரைவில் இந்தியாவை வந்தடையும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





