சென்னை: சட்டசபையில் “இங்கே அனைவரும் சமம்” என முதல்வர் விஜய் தெரிவித்தார். ஓர் உறுப்பினர் கொண்ட கட்சிகளின் கருத்துகளுக்கும் அதிக உறுப்பினர் கொண்ட கட்சிகளின் கருத்துகளுக்கும் ஒரே அளவில் மதிப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“மக்களே மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்கள் ஆட்சி” என்ற ஆபிரஹாம் லிங்கன் உரையை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கிய விஜய், மக்களின் எதிர்பார்ப்புகளை அவைக்கு கொண்டு வந்து திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் செயல்படுத்தும் பொறுப்பு இந்த அவைக்கு இருப்பதாகச் சொன்னார்.
அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெறும் வகையில் அவையின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும், நல்லது ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையை வழிநடத்தத் தகுதியான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றார். அவையின் மாண்பும் கண்ணியமும், உறுப்பினர்களின் மரியாதையும் காக்கும் பொறுப்பு பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வள்ளுவரின் “குணம்நாடிக் குற்றமும் நாடி…” என்ற குறளுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராகவும் செம்மையாகவும் அமைதியாகவும் நடைபெறவும், ஜனநாயக பண்புகள் மற்றும் நெறிகள் பேணிப் பாதுகாக்கவும் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் விஜய் தெரிவித்தார்.





