சென்னை: கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, சீரான விநியோகம் நடைபெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். லாரிகள் மூலம் விநியோகம், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். வரவிருக்கும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு தூர்வாரல் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவுபடுத்தி, சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் காலதாமதமின்றி தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.