அமெரிக்காவில் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில், முழு பட்டம் பெறும் மாணவர்களின் கல்விக்கடன் சுமையை தானே ஏற்கப் போவதாக அறிவித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் கவனம் ஈர்த்துள்ளார்.

வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ‘வில்சன் ஸ்கூல் ஆப் டெக்ஸ்டைல்ஸ்’ கல்லூரியின் பட்டமளிப்பு விழா மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் அனில் கோச்சர் கலந்து கொண்டார்.

மாணவர்களை உரையாற்றிய அவர், பட்டம் பெறும் 176 மாணவர்களின் இறுதியாண்டு கல்விக்கடனை தானும் அவரது மனைவி மர்லினும் முழுமையாகச் செலுத்துவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரங்கம் முழுவதும் கைத்தட்டல் ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

கல்விக்கடன் என்ற சுமை இல்லாமல் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை துணிச்சலுடன் தொடங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என கோச்சர் கூறினார். மேலும், தனது தந்தை பிரகாஷ் சந்த் கோச்சர் 1946-ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து அமெரிக்கா வந்தவர் என்றும், அதே கல்லூரியின் இரண்டாவது இந்திய மாணவர் என்றும் குறிப்பிட்டு, அப்போது அமெரிக்கா வழங்கிய வரவேற்பே குடும்பத்தின் பயணத்தை உருவாக்க உதவியதாக தெரிவித்தார்.