இந்தியாவிடம் பெற்ற ரூ.475 கோடி கருவூல பத்திரம் முதிர்வடைந்ததைத் தொடர்ந்து, அதற்கான தொகையை மாலத்தீவு முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது என்று மாலே நகரில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுகளுக்கு தற்காலிக நிதித் தேவை ஏற்படும் போது குறுகிய கால கடன் பெற பயன்படுத்தப்படும் கருவூல பத்திரங்கள் மூலம் இவ்வகை கடன் ஏற்படுத்தப்படுகிறது. மாலத்தீவு தனது பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க இதுபோன்ற ஏற்பாடுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு, அப்போது அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் தலைமையிலான அரசு இந்தியாவிடம் இருந்து மொத்தம் ரூ.1,425 கோடி கடன் பெற்றிருந்தது. போதிய நிதி இல்லாத காரணத்தால், காலக்கெடுவில் திருப்பிச் செலுத்த முடியாமல் ஆண்டுதோறும் நீட்டிப்பு கோரியதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
பாரத ஸ்டேட் பாங்க் வாயிலாக ரூ.415 கோடிக்கான கருவூல பத்திரம் இந்தியா சார்பில் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அந்த பத்திரம் முதிர்வடைந்ததால், அதற்கான தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2024 ஜனவரியில் ரூ.475 கோடி கடன் ஏற்கனவே செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.475 கோடியை செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பரில் முடிவடைவதால், அதையும் விரைவில் இந்தியாவுக்கு செலுத்தப்படும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.





