மியான்மரின் மண்டலே மண்டலத்தில் உள்ள சுரங்கப்பகுதியில், சுமார் 2.2 கிலோ (சுமார் 11,000 காரட்) எடையுள்ள பிரமாண்ட ரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கண்டெடுப்பு, ரத்தினக் கற்களின் “சொர்க்கம்” எனப் பெயர் பெற்ற மோகோக் நகரில் உள்ள சுரங்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ரத்தினக்கல் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூர்வமான இந்த கல் தற்போது மியான்மர் தலைநகர் நேப்பிடோவில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே பகுதியில் 1996ஆம் ஆண்டு 21,450 காரட் எடையுள்ள பெரிய ரத்தினக்கல் கிடைத்திருந்தாலும், புதிய கண்டெடுப்பு தரத்தில் ‘நம்பர் 1’ என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த கல்லின் மிதமான ஒளி ஊடுருவும் தன்மை மற்றும் அதிக பிரதிபலிப்பு காரணமாக, இதன் மதிப்பு முன்பு கிடைத்த கல்லை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் ராணுவ ஆட்சி தொடர்பான சூழல் காரணமாக, ரத்தினக் கற்கள் விற்பனை வருவாய் ஆயுத வாங்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்துடன் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச அளவில் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.





