தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ‘சனாதனம்’ குறித்து சட்டமன்றத்தில் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஹிந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி மதத்தை அரசியலுக்காக பயன்படுத்த முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
உதயநிதியின் முதல் சட்டமன்ற உரையிலேயே ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என பேசியது அரசியல் பக்குவமின்மையை காட்டுவதாகவும், ஹிந்துக்களை தொடர்ந்து குறிவைப்பது கண்டனத்திற்குரியது என்றும் நயினார் தெரிவித்தார். இத்தகைய பேச்சு அரசியல் சரிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்ற முன்பைய பொதுவெளிப் பேச்சால் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை அவர் சம்பாதித்ததாகவும், அதுவே துணை முதல்வர் பதவியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் நிலைக்கு வந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததாகவும் நயினார் கூறினார்.
அரசியலில் முன்னேற வேண்டுமெனில் குறிப்பிட்ட மதத்தின் மீது உள்ள வெறுப்புணர்வை விட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் அடையாளங்களும் நம்பிக்கைகளும் முக்கியம் என்பதை உணர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சட்டமன்றத்தில் பகிரப்பட்டதாக அவர் குறிப்பிட்ட வெறுப்புப் பிரச்சாரத்திற்கு மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் விஜய் என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதை தமிழகம் எதிர்நோக்கி இருப்பதாகவும் நயினார் தெரிவித்தார்.





