மே 3 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான இந்தத் தேர்வு, முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் 551 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்ற நிலையில், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
NTA தெரிவித்ததன்படி, ராஜஸ்தானில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன.
இந்த வழக்கில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் NTA கூறியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு அதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மறுதேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.





