சென்னை: தமிழகத்தின் கஜானா “காலி” என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் உரையில், தமிழக அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருப்பதாகவும், கஜானாவை “சுத்தமாக துடைத்து” விட்டுச் சென்றதாகவும் முதல்வர் விஜய் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே மாநிலத்தின் நிதிநிலை தெளிவாக விளக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே விஜய் வாக்குறுதிகள் அளித்ததாகவும் கூறி, மக்களை ஏமாற்றி திசை திருப்ப வேண்டாம் என விமர்சித்தார்.

இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக பிரவீன் தனது பதிவில், மாநிலத்தின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும் 20 ரூபாய்க்கும் மேல் கடன் வட்டிக்கே செலவாகிறது என்றும், இது மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார். மேலும் வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற கட்டாயச் செலவுகளுக்கே 40 ரூபாய் செல்கிறது என கூறி, “கஜானா காலி” என முடிவுரைத்தார்.