தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில், மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோபத்துடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் தமிழகம் வந்தார். சென்னை மீனம்பாக்கம் அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், அங்கிருந்து பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல் சென்றார். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் ஹோட்டலுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலில் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல், அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்த பின், ‘இனியாவது தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாருங்கள்’ என கடுமையாக கூறிவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சத்தியமூர்த்தி பவனில் ராகுலுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற அதிருப்தியும் எழுந்துள்ளது. முன்னாள் நிர்வாகி மயிலை அசோக்குமார் வெளியிட்ட அறிக்கையில், வரவேற்பு முறையாக நடக்கவில்லை என்றும், வெளி ஆட்கள் நெருக்கியதால் ராகுல் நிலை தடுமாறியதாகவும் கூறி, பொறுப்பாளர்கள்மீது நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.