அசாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் பதவியேற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். குவஹாத்தியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டசபைக்கு ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 4 அன்று முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜ.க. 82 இடங்களில் வென்றது; கூட்டணி கட்சிகளான அசோம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி தலா 10 இடங்களை கைப்பற்றின. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 102 இடங்களை பெற்றது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்த நிலையில், சர்மாவின் தலைமையின்மீது நம்பிக்கை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு மீண்டும் முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. கவர்னர் லஷ்மணபிரசாத் ஆச்சார்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குவஹாத்தி கால்நடை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்மாவுடன் மேலும் நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.





