தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துகள் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அவற்றை மீட்க தமிழக அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று திங்களன்று அதிருப்தி தெரிவித்தது.
சிலை கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய 41க்கும் மேற்பட்ட கோப்புகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தன்னிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக கூறி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இடையீட்டு மனுதாரராக சேர்க்க கோரினார். மூல மனுதாரர் எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து, அவரை இடையீட்டு மனுதாரராக இணைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
பொன் மாணிக்கவேல் தரப்பு வாதத்தில், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பல சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவற்றில் சில விரைவில் ஏலத்திற்கு வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) கூட பதிவு செய்யவில்லை; எப்.ஐ.ஆர். இருந்திருந்தால் வெளிநாட்டில் நடைபெறும் ஏலங்களைத் தடுக்க முயற்சி செய்ய முடிந்திருக்கும் என்றும் கூறப்பட்டது.
அமர்வு, தென்னிந்திய சிலைகளின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் இத்தகைய பாரம்பரியச் சொத்துகளை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது. 2018ல் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தும் முன்னேற்றம் இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், மனுதாரர்கள் தங்களிடம் உள்ள தரவுகளை வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; தேவையெனில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27க்கு ஒத்திவைத்தனர்.





