உயர் நீதிமன்றங்களில் ஜாமின் மனுக்கள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் எட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு வழங்கியது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனுக்கள் நிலுவையில் இருப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு பொருந்தும் வகையில் இந்த வழிமுறைகள் அறிவிக்கப்பட்டன. நிலுவை குறைய வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

முக்கியமாக, ஜாமின் மனுக்களை முடிக்க உயர் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும், நீதிமன்றங்களும் புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜாமின் விசாரணை நடக்கும் போது மத்திய அல்லது மாநில அரசுகள் ஒத்திவைப்பு கோருவதை இனி அனுமதிக்கக் கூடாது; அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை என அரசுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜாமின் மனுக்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக பட்டியலிடப்பட வேண்டும்; விசாரணைக்கு வராத மனுக்கள் தானாகவே அடுத்த பட்டியலுக்கு நகர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பட்டியலிடப்பட வேண்டும்; முதல் விசாரணைக்கு முன்பே நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்புவதால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, ஜாமின் மனுக்களின் நகல்களை முன்கூட்டியே அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள் தாமதமாவதால் ஜாமின் வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இதைச் சரிசெய்ய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.