விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக, திமுக மற்றும் அந்தக் கூட்டணிகளில் உள்ள சில கட்சிகள் இணைந்து தன்னை முதல்வராக்க முயன்றதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த முயற்சிக்கு விசிக ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.
கட்சியின் வலிமை, மக்களின் மனநிலை மற்றும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு தான் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும், வெறும் அதிகாரம் அல்லது பதவிக்காக உடனடி முடிவுகள் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். இது பெரிய முடிவு என்பதால் நிதானமாகவே அணுக வேண்டுமெனவும் தெரிவித்தார்.
திமுக விசிகக்கு அந்நியமானது அல்ல; அது கூட்டணிக் கட்சி தான் என்றும், அந்த கூட்டணியில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் அவர் நினைவூட்டினார். கூட்டணிக் கட்சிகள் கூறும் கருத்துகளை உடனே புறந்தள்ள முடியாது; பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலையிட்டு அந்த முயற்சியை முறியடித்ததாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுந்தபோது, காங்கிரஸ் எந்த வகையில் தலையிட்டது என்பது தமக்கு தெரியாது என்றார். சிலர் விசிகை அணுகினார்கள்; ஆனால் அதற்கு உடன்படவில்லை என்றும் அவர் மீண்டும் கூறினார்.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா என்ற கேள்விக்கு, அந்த கோரிக்கையை கட்சியினர் இன்னும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக தன்னை சந்திக்க வருவதாகவும், அந்த சந்திப்பில் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டேன் என்றும் கூறினார்.





