முதல்வரின் நேரடி கண்காணிப்பில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும் என தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை விவரப்படி, மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 12 இடங்கள் இடம்பெறுகின்றன. போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்த மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களை கண்டுபிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த, அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.