தமிழக சட்டசபை இன்று 2வது நாளாக கூடியது. சபாநாயகர் தேர்தலில் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பொறுப்பேற்றார். சபை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டசபையில் பேசிக் வாழ்த்து தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் அரசியல் நாகரிகமாக கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதை குறிப்பிட்டு, அந்த மரியாதை சட்டசபையிலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்தார். குறைகளை சுட்டிக்காட்டியும் நிறைவுகளை எடுத்துரைத்தும் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் போதுமான நேரம் ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், சபாநாயகர் தராசு போல நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறி வாழ்த்தினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அமமுக எம்எல்ஏ காமராஜ் விஜய் அரசுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார். பாமக சவுமியா மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சபாநாயகர் நடுநிலையுடன் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றனர். பாஜ போஜராஜன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணக்கமாக மாநில அரசு செயல்பட வேண்டும் என்று கூறினார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் சட்டசபை நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பாகின.