பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மே 13ம் தேதி மூன்று நாள் அரசு முறை பயணமாக சீனா செல்ல உள்ளதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பயணம் சீன அதிபர் ஷீ ஜின்பிங் அழைப்பின் பேரில் நடைபெறுகிறது.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 2017ல் சீனாவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் சீனா பயணம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்காசிய போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா–சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தப் பயணம் நடைபெறுவது கவனிக்கத்தக்கது.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. அணுசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான விஷயங்கள் சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





