கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடியில் யு.பி.ஐ. (Unified Payments Interface) மூலம் செலுத்தப்பட்ட கட்டணத்தின் டிஜிட்டல் தடயமே முக்கிய ஆதாரமாக அமைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் கூறுகையில், மே 6 இரவு சுமார் 10 மணியளவில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மத்யம்கிராமில் உள்ள தனது வீட்டிற்கு ‘மஹிந்திரா ஸ்கார்பியோ’ காரில் சென்ற ராத்தை, ‘நிசான் மைக்ரா’ காரில் வந்தவர்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, சிவப்பு நிற காரில் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய வாகனம் ஒரு சுங்கச்சாவடியில் நின்றதை கண்டறிந்தனர். அங்கு சுங்கக் கட்டணம் யு.பி.ஐ. மூலம் செலுத்தப்பட்டிருந்ததால், அந்த பரிவர்த்தனை விவரங்கள் விசாரணைக்கு முக்கிய தடயமாக மாறியது.
இதன் அடிப்படையில் பீஹாரின் பக்சர் பகுதியைச் சேர்ந்த விஷால் ஸ்ரீவஸ்தவா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் சிங் மற்றும் மயங்க் மிஸ்ரா ஆகிய மூவரை, மூன்று மாநில போலீசார் ஒருங்கிணைந்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கூலிப்படையுடன் தொடர்புடையவர்கள் என்றும், பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்ததாக போலீசார் கூறினர். மூவரும் பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.





