சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்சியின் சி.வி.சண்முகம் அணியினரை தமிழக முதல்வர் விஜய் திங்கள்கிழமை சந்தித்தார்.
கட்சியின் தோல்விக்கு ஈபிஎஸ் (எடப்பாடி கே.பழனிசாமி) செயல்பாடுகளே காரணம் எனக் கூறி, சி.வி.சண்முகம்–எஸ்.பி.வேலுமணி தரப்பு எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டசபை அதிமுக குழுத் தலைவர் நியமனம் தொடர்பாகவும் பிளவு வெளிப்பட்டுள்ளது; ஒரு தரப்பு எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வலியுறுத்தி, மற்றொரு தரப்பு ஈபிஎஸ்சை ஆதரித்து சபாநாயகரிடம் தனித்தனியாக கடிதங்கள் அளித்துள்ளனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு விஜய் சென்றபோது, சண்முகமும் வேலுமணியும் அவரை வரவேற்றனர். நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றதாக கூறப்படுகிறது.
சந்திப்பின்போது, கட்சியை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சண்முகமும் வேலுமணியும் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தவெக அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.





