மேற்கு வங்கத்தில் இந்தியா–வங்கதேச எல்லைப் பகுதியில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வேலி அமைப்பதற்காக நிலம் ஒதுக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொல்கட்டா தலைமைச் செயலகத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மாநிலம் முறையாக இணைவதாக தெரிவித்தார். திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பி.எம். ஜன் ஆரோக்ய யோஜனா, பி.எம். பசல் பீமா யோஜனா, பள்ளி மேம்பாட்டுக்கான பி.எம். ஸ்ரீ திட்டம், கைவினைஞர்களுக்கான பி.எம். விஸ்வகர்மா உள்ளிட்ட மத்திய அரசின் பல நலத்திட்டங்கள் இனி தடையின்றி செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். முந்தைய திரிணமுல் காங்கிரஸ் அரசு அரசியல் காரணங்களால் இத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எல்லை வேலி பணிக்காக நிலம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை 45 நாட்களுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டங்களும் மாநிலத்தில் உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அரசு பணிகளுக்கான பொது பிரிவு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 40-இல் இருந்து 45 ஆகவும், எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. பிரிவினருக்கு 43-இல் இருந்து 48 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளுக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. இதற்கிடையில், புதிய தலைமைச் செயலராக மனோஜ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் தலைமைச் செயலர் துஷ்யந்த் நாரியாலா டெல்லியில் மாநில ரெசிடென்ட் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.





