மும்பை: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு நிறுவனங்கள் மீண்டும் மாறினால், வணிக அலுவலகப் பரப்பு தேவையும் குறைந்து, வாடகை வருவாயை நம்பியுள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என ரியல் எஸ்டேட் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிய அலுவலக விரிவாக்கத் திட்டங்கள் தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாக துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் வணிக அலுவலக சந்தை பெரிய அளவில் சுருங்கி, கட்டடங்களை குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டியவர்கள் கடும் இழப்பை சந்தித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை மீண்ட நிலையில், பெங்களூரு, ஹைதராபாத், புனே, குருகிராம் போன்ற நகரங்களில் அலுவலகங்கள் அதிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் எட்டு முக்கிய நகரங்களில் 1.95 கோடி சதுர அடி அலுவலகப் பரப்புகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன; இது முந்தைய ஆண்டை விட 3% அதிகம். ஆனால், வீட்டிலிருந்து வேலை மீண்டும் பரவலானால், நிறுவனங்கள் நீண்டகால குத்தகைக்கு பதிலாக சிறிய அலுவலகங்களையும் குறுகிய உறுதிப்பாடுகளையும் தேர்வு செய்யக்கூடும் என துறையினர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது குடியிருப்பு தேவையில் மாற்றத்தை உருவாக்கி, கூடுதல் அறைகள், பால்கனி மற்றும் வேலைக்கென தனி இடவசதி கொண்ட பெரிய வீடுகளுக்கான விருப்பத்தை உயர்த்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போதைய அறிவுறுத்தல் தற்காலிகமானது என்பதால், வணிக அலுவலகப் பரப்பை பெரிய அளவில் பாதிக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.