சத்தீஸ்கரில் வெட்டி வைத்திருந்த தர்பூசணி சாப்பிட்ட பின் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இதேபோன்ற சம்பவம் கவனம் பெற்ற சில நாட்களிலேயே இது நடந்துள்ளது.
ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டம் குர்கோட் கிராமத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற போடி தால்ஹா கிராமத்தைச் சேர்ந்த அகிலேஷ் திவார் (15) பின்னர் தனது மாமா வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 10 மாலை அங்கு தங்கியிருந்த அவர் மற்றும் சில சிறுவர்கள், வெட்டி துண்டுகளாக வைத்திருந்த தர்பூசணியை சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அகிலேஷ் உயிரிழந்தார். மற்ற சிறுவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெட்டி வைத்த தர்பூசணியை பல மணி நேரத்திற்கு பின் சாப்பிட்டதால் உணவு விஷமாதல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன், தடயவியல் பரிசோதனைக்காக உள் உறுப்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
மும்பை பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தர்பூசணி சாப்பிட்ட பின் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், சத்தீஸ்கரில் நடந்த இந்த சம்பவமும் பொதுமக்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.





