சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து, முதல்வர் அலுவலகத்தின் (CMO) அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை பின்தொடர்வோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

கடந்த காலங்களில், முதல்வர் அலுவலகத்தின் சமூக வலைதள பக்கங்கள் பெரும்பாலும் ‘அறிவிப்பு பலகை’ போலவே செயல்பட்டன. சுற்றுப்பயணங்கள், அரசு விழாக்கள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் போன்றவற்றின் புகைப்படங்கள் மட்டுமே அதிகமாக வெளியிடப்பட்டன. அரசுத் துறையினர் மற்றும் செய்தியாளர்கள் தகவல் தேவைக்காக இவற்றை பயன்படுத்தி வந்த நிலையில், இளைஞர்களுடன் தொடர்பு குறைவாகவே இருந்தது.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின், இந்த பக்கங்கள் அதிக மக்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு வழக்கமான மக்கள் தொடர்புத் துறை அறிவிப்புகளாக இருந்த பதிவுகள், தற்போது இளைஞர்களை கவரும் வகையில் நவீன ‘டிஜிட்டல் கார்டு’கள் மற்றும் விளக்கப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளின் பின்தொடர்வோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. விஜய் முதல்வராக பதவியேற்கும் முன் 4.47 லட்சமாக இருந்த முதல்வர் அலுவலகத்தின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது 18 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், முகநூல் பக்கம் மற்றும் ‘எக்ஸ்’ பதிவுகளை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.