போலி ஆன்லைன் வர்த்தக தளத்தை உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி பாஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்த பின்னர் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையில் ரவி ரத்தோர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.30 லட்சம் சம்பளம் பெற்ற பணியை விட்டு விலகி, போலி வர்த்தக தளத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி முதலீடு செய்யத் தூண்டியதாகவும், அதற்காக போலி இணையதளம் மற்றும் மொபைல் வர்த்தக செயலியை உருவாக்கி பணம் திரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். திரட்டிய தொகை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறினர்.
வாக்குறுதி அளித்தபடி லாபம் கிடைக்காததால் பலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரையும் உடந்தையாக இருந்த இரண்டு பேரையும் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.





