தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான இறக்குமதி சுங்க வரியை 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து புதன்கிழமை தங்க விலையில் கடும் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வாங்குதலை கட்டுப்படுத்தி, அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஒரு ஆண்டுக்கு பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், நாட்டின் அந்நியச் செலாவணி நிலையை வலுப்படுத்த மக்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட சூழல் உருவாகியுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி உயர்வு அறிவிப்பின் தாக்கமாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200 ஆகவும், கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400 ஆகவும் விற்பனையானது. ஆனால் மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 மற்றும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து, கிராம் ரூ.15,000 ஆகவும், சவரன் ரூ.1,20,000 ஆகவும் நிலைபெற்றது.

வெள்ளி விலையும் காலை உயர்வு கண்டது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.330 ஆகவும், கிலோவுக்கு ரூ.30,000 உயர்ந்து ரூ.3,30,000 ஆகவும் விற்பனையான நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.320 ஆகவும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.3,20,000 ஆகவும் விற்பனையானது.

இந்த வரி உயர்வு பிளாட்டினம், நகை பாகங்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் தொடர்பான தொழில்துறை இறக்குமதிகளுக்கும் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.