திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்ற பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) முதல்வர் யார் என்ற முடிவை இன்னும் அறிவிக்காமல் ஆலோசனைகளைத் தொடர்ந்து வருகிறது.

140 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் யூடிஎஃப் 102 இடங்களில் வென்று ஆட்சியை அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 இடங்களை கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 35 இடங்களுக்கு சுருங்கியது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன் ஆகிய மூத்த தலைவர்கள் இடையே போட்டி நிலவுவதால் முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். எம்.எம்.ஹாசன், கே.சுதாகரன், கே.முரளிதரன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் செயல் தலைவர்கள் ஷபி பரம்பில், ஏ.பி.அனில் குமார், பி.சி.விஷ்ணுநாத் ஆகியோருடனும் ஆலோசனை நடந்தது.

மூத்த தலைவர் கே.முரளிதரன், எம்.எல்.ஏ.க்களின் கருத்தை மட்டும் வைத்து முடிவு எடுக்காமல், கூட்டணி கட்சிகள் மற்றும் மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பின் தீர்மானிக்கப்படும் என்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, விரைவில் “நல்ல செய்தி” வரும் என்றார். எம்.எம்.ஹாசன், சட்டசபை குழுத் தலைவர் மற்றும் முதல்வர் தேர்வில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை என்றும், காங்கிரஸ் தனித்தே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.