நாட்டில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) விநியோகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை; அனைத்தும் சீராக நடைபெறுகிறது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டில்லியில் தெரிவித்தார். மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றத்தினிடையிலும் விநியோகம் தடையின்றி தொடர்வதாக அவர் கூறினார்.

விநியோகத்தை உறுதி செய்ய தினசரி எல்.பி.ஜி. உற்பத்தி 36,000 டன்னிலிருந்து 54,000 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார். மேலும், தற்போது 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பும், 60 நாட்களுக்கு தேவையான எல்.என்.ஜி. இருப்பும், 45 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயு இருப்பும் உள்ளதாக தெரிவித்தார்.

இதனால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். சில்லரை விற்பனை விலையை மாற்றாமல் வைத்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவரது தகவலின்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது; தற்போதைய காலாண்டில் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படக்கூடும். பெட்ரோல் லிட்டருக்கு 14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 42 ரூபாய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு 674 ரூபாய் என்ற அளவில் இழப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியதை உடனடி ‘லாக்டவுன்’ அறிகுறியாக பார்க்க வேண்டாம் என அமைச்சர் தெளிவுபடுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான சூழல் இருந்தாலும் மாற்று வழிகள் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.