மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்ந்தால் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே இருந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை இந்தியா தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் பேசிய அவர், கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் மீது தொடர்ந்து அழுத்தம் ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றமின்றி வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்தார். மோதல் நீடிப்பதால் கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை ஒரு அளவு ஈடுசெய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.