புதுடில்லி: சனாதனம் குறித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதற்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொஸ்பேலா கூறியுள்ளார்.

திங்கட்கிழமை சட்டசபையில் உரையாற்றிய உதயநிதி, பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட பின்னர், மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறி உரையை முடித்தார். இந்த கருத்துக்கு பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்வினைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இது உதயநிதியின் தனிப்பட்ட கருத்து என குறிப்பிட்ட ஹொஸ்பேலா, அதற்கான பதிலை மக்கள் தேர்தல் முடிவின் மூலம் தெரிவித்துவிட்டனர் என கூறினார்.

மேலும், சனாதனம் ஒருபோதும் அழியாது என்றும், அது நாட்டின் உயிர்த்துடிப்பும் ஆன்மாவும் என்றும் அவர் தெரிவித்தார். இது வெறும் மதத்தைப் புகழ்வது அல்ல; ஒரு விழுமியமாகவும், காலத்தால் அழியாததாகவும் இருப்பதாக அவர் விளக்கினார்.

சனாதனத்தை ஆலமரத்துடன் ஒப்பிட்ட அவர், ஆண்டுகள் கடந்தாலும் அது உறுதியாக நிலைத்து நிற்கும்; ஆழமான வலிமையான வேர்களுடன் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என கூறினார்.