சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணையில், மத நடைமுறைகளை தொடர்ந்து அரசியல் சாசன நீதிமன்றங்களின் முன் கேள்விக்குட்படுத்தத் தொடங்கினால் இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மதத்தின் நிலை என்ன ஆகும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மத சுதந்திரத்தின் எல்லைகள் உள்ளிட்ட பரந்த கேள்விகளை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆராய்ந்து வருகிறது; விசாரணை 14வது நாளை எட்டியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் காரணமாக தற்போது இந்த அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெறுகிறது.

பெண்கள் ஆதரவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் பராசத், 2025ல் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கலப்பு திருமணங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வாதிட்டார். இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், இத்தகைய கணக்கெடுப்புகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பது சிக்கலானது என்றும், நீதிமன்றத்தில் அவற்றை முன்வைக்கும் போது வழக்கறிஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

நீதிபதி பி.வி. நாகரத்னா, விருப்பமான நபரை திருமணம் செய்யும் உரிமை அரசியலமைப்பால் ஏற்கனவே உறுதி செய்யப்படுகிற நிலையில், அதற்காக தனியாக கணக்கெடுப்பு ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பராசத், அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் பகுதியில் உள்ள 51ஏ பிரிவு பெண்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நடைமுறைகளை குடிமக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது என்றார்.

மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, தனிநபர் உரிமைகள் மற்றும் குழு உரிமைகள் இடையிலான முரண்பாடுகளை ஆய்வு செய்து சரியான பாதையை காட்டுவது நீதிமன்றங்களின் பணிகளில் ஒன்று என தெரிவித்தார். தலைமை நீதிபதி, மக்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வழியாக சமூக சீர்திருத்தத்தை கோரும்போது நீதிமன்றங்கள் அதை ஏற்க முடியும்; ஆனால் ஒரு விஷயம் திணிக்கப்பட்டதாக கருதப்பட்டால் நீதிமன்றங்கள் எவ்வாறு தலையிட முடியும் என கேள்வி எழுப்பினார். மற்றொரு கட்டத்தில், மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சமூகநல சட்டங்கள் மத நடைமுறைகளில் தலையிடுகிறது என்ற காரணத்தால் ரத்து செய்யப்படக் கூடாது என்றும், மாதவிடாய் குறித்த சமூக பார்வை பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையாக இருப்பதாகவும் வாதிட்டார். இதற்கு நீதிபதி நாகரத்னா, அது தடை என கருதப்படுகிறதா இல்லையா என்பது பக்தர் அதை எப்படி பார்க்கிறார் என்பதையே பொறுத்தது என்றும், ஒவ்வொரு மத நடைமுறையையும் நீதிமன்றத்தில் சவால் செய்தால் நூற்றுக்கணக்கான மனுக்கள் குவியலாம் என்றும் எச்சரித்தார்.