தமிழக வெற்றிக் கழகம் (TVK) ‘தூய அரசியல்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்து தற்போது ‘அழுக்கு அரசியல்’ செய்கிறது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது அறிக்கையில், TVK அரசு அமைவதற்கோ தொடர்வதற்கோ திமுக தடையாக இருக்காது என்ற தன் நிலைப்பாட்டின்படி, நம்பிக்கை ஓட்டெடுப்பை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரேமலதா, ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகிய எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்ததாகக் கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்ற நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அவர்களின் நிலைப்பாட்டை திமுக மதிப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.
ஆனால், கடந்த மூன்று நாட்களில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருப்பதாகவும், பிளவுபட்ட அதிமுக என்ற ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க’ முயன்று அதன் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வரின் நடவடிக்கைகளையும், பிளவுபட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு என்ன ‘ரிட்டர்ன் கிப்ட்’ தரப்படுமென்பதையும் மக்கள் கவனித்து வருவதாகக் கூறிய அவர், திமுக தனது கொள்கையில் உறுதியாக இருந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றார்.





