லண்டன்: பிரிட்டனில் நடந்த உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது அவரது சொந்த தொழிலாளர் கட்சிக்குள்ளேயே பதவி விலகக் கோரும் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 1,400க்கும் மேற்பட்ட கவுன்சில் இடங்களை இழந்ததாகவும், வேல்ஸ் மாகாணத்தின் செனட் சபை (Senedd) மீதான கட்டுப்பாட்டையும் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஸ்டார்மர் ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த எதிர்ப்பு விளிம்பு நிலை உறுப்பினர்களுடன் மட்டுமல்லாமல், மூத்த அமைச்சர்களிடமும் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் மஹ்மூத் மற்றும் வெளியுறவு அமைச்சர் யுவெட் கூப்பர் உள்ளிட்டோர் ஸ்டார்மரை நேரில் சந்தித்து பதவி விலக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறி சில அமைச்சரவை உதவியாளர்கள் பதவி விலகியதாகவும் தகவல். தொழிலாளர் கட்சியின் 403 எம்.பி.க்களில் சுமார் 78 பேர் ஸ்டார்மர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எந்தவொரு சவாலையும் எதிர்த்து போராடுவோம் என ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். 2010 முதல் பல பிரதமர் மாற்றங்கள் நடந்ததும், 2022ல் குறுகிய காலத்தில் மூன்று பிரதமர்கள் மாறியதும் போன்ற முந்தைய கன்சர்வேடிவ் அரசின் குழப்பத்தை தொழிலாளர் கட்சியும் பின்பற்றினால், மக்கள் அதை மன்னிக்க மாட்டார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.





