திருப்பூர் அருகே போலீஸ் செக் போஸ்டில் நடந்த சாலை விபத்தில், போலீஸ் ஒருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்டில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. செக் போஸ்ட் அருகே வந்த லாரி பேரிகார்டில் மோதியதைத் தொடர்ந்து அதைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது பேரிகார்டை சரிசெய்யும் பணியில் வெள்ளகோவில் போலீஸ் ரவிச்சந்திரன் மற்றும் லாரி டிரைவர் ஈடுபட்டிருந்த நிலையில், கட்டுப்பாடு இழந்த கார் அவர்கள் மீது மோதியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவிச்சந்திரன் உட்பட காரில் வந்தவர்கள் சேர்த்து ஆறு பேர் உயிரிழந்தனர்.

கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன; சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.