சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய சில கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது. மாநிலம் மற்றும் தேசிய அளவிலான ஊடகங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்தது.
சட்டசபை அமர்வில் பிரேமலதா உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்த நியமனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், இதைப் பற்றி மீண்டும் யோசிப்பதாக தெரிவித்தார்.
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர், முதல்வர் விஜய் உடனடியாக அந்த நியமன உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதன் மூலம் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டது.
ரிக்கி ரதன் பண்டிட் ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் என கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் என்றும், 140 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் அவர் முன்பே கணித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





