சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது நிர்வாகிகள் மற்றும் கட்சியினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலர் பரணி பாலாஜி, திருக்கோவிலூர் சாலையில் பட்டாசு வெடித்து பிறந்த நாளைக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலரும் அமைச்சருமான ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற முதல்வர் விஜய் கட்சிக்கு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். பிறந்த நாள் மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக சாலையிலோ மக்கள் கூடும் இடங்களிலோ போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், பேனர் அல்லது கொண்டாட்டம் உள்ளிட்ட எந்த வழியிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2024ல் கட்சி பதவி கிடைத்தபோதும், 2025ல் பிறந்த நாளின்போதும் இதேபோல் சாலையை மறித்து விழா நடத்தப்பட்டதாகவும், அப்போது அறிக்கை வந்ததோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சில கட்சியினர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





