சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய், தனது அரசு “குதிரை வேகத்தில்” செயல்படும் என்றும், குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என்றும் தெரிவித்தார்.

தான் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பதிலுரை அளித்த அவர், ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பேசிய அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ் குறிப்பிட்டதுபோல் அரசு மதச்சார்பற்றதாகவே அமையும் என்றும், முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை தொடர்வோம் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தை ஆண்ட பல்வேறு கட்சிகளின் அரசுகள் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கிய திட்டங்களும், சமூக நீதிக்கு முன்னுதாரணமாக நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் நினைவில் கொண்டு ஆட்சி நடைபெறும் எனவும், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் எண்ணங்களும் வழிகாட்டியாக இருக்கும் எனவும் விஜய் தெரிவித்தார்.

தமிழக முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்களின் வழிகாட்டிய கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாமல் ஆட்சி நடைபெறும் என கூறிய அவர், தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என சட்டசபையிடம் கேட்டுக்கொண்டார்.