இந்தியா–வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணிகளை மேற்கு வங்க அரசு துரிதப்படுத்தியதைத் தொடர்ந்து, வங்கதேச அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா வங்கதேசத்துடன் 4,097 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் மேற்கு வங்கப் பகுதியில் கணிசமான தூரத்திற்கு இன்னும் வேலிகள் அமைக்கப்படவில்லை; நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களே காரணம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முன்பு திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 127 கி.மீ. எல்லை முள்வேலி திட்டத்தை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம். ஹுமாயூன் கபீர், இந்த முடிவை கடுமையாக விமர்சித்து, முள்வேலிகளைப் பார்த்து வங்கதேச மக்களோ அரசோ அஞ்சப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும், எல்லைப் பாதுகாப்பில் இந்தியா இன்னும் மனிதாபிமான முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தங்களுக்கு இந்திய அரசுடன் தான் நேரடித் தொடர்பு இருப்பதாகவும், மாநிலங்களின் உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை என்றாலும் தேசிய நலன் பாதிக்கப்படும்போது மவுனமாக இருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.





