சென்னை விமான நிலையத்தில் முதியோர் உள்ளிட்ட பயணியருக்கு உதவும் ஒப்பந்த ஊழியர்கள், வீல் சேர் உள்ளிட்ட சேவைகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் பணம் கேட்டு வற்புறுத்துவதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளில் 60,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு சேவைகள் டி1, டி4 முனையங்களிலும், சர்வதேச சேவைகள் டி2 முனையத்திலும் நடைபெறுகின்றன. பழைய உட்கட்டமைப்பு, பயணியர் நகர்வில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்கனவே இருப்பதாகவும் பயணியர் கூறுகின்றனர்.
பொதுவாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு லக்கேஜ் கையாளுதல், வீல் சேரில் அழைத்துச் செல்லுதல், செக்-இன் உதவி போன்ற பணிகளுக்காக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். இத்தகைய உதவிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சிலர் நிர்ணயித்த தொகையைத் தாண்டி கூடுதல் பணம் கட்டாயமாக தர வேண்டும் என வற்புறுத்துவதாகவும், சில சந்தர்ப்பங்களில் ரூ.2,000 வரை கேட்பதாகவும் பயணியர் குற்றம் சாட்டுகின்றனர். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு பாதிக்கப்பட்ட பயணி, தனது வயதான பெற்றோருக்காக “மீட் அண்டு கிரீட்” உதவி சேவையை பயன்படுத்தி ரூ.1,000 செலுத்தியபோதும், மேலும் ரூ.1,000 கட்டுமாறு ஊழியர்கள் வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
இவ்வகை கட்டாய வசூலில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே உள்ள பல சிக்கல்களுக்கு மேலாக இது கூடுதல் தலைவலியாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.





