சென்னை: தமிழக சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இபிஎஸ் தலைமையிலான தரப்பு தமிழக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளது.

புகாரில், அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சி கட்டுப்பாட்டையும் கொறடா உத்தரவையும் மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்தில் மனு அளித்து, கட்சி உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், இந்த விவகாரத்தை இபிஎஸ் சட்டசபையிலேயே முன்வைத்ததாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஆதாயம் தேடும் முயற்சிகள் நடக்கின்றன என அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் சபாநாயகரிடமிருந்து இதுவரை பதில் இல்லை என்றும் கூறினர்.

மேலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது சட்டசபை வாக்கெடுப்பு விதிகளின்படி சட்டத்திற்கு எதிரானது என்றும், கட்சி தாவல் சட்டத்தின் பிரிவுகள் பொருந்தும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் இல்லாததால், அவரது செயலரிடம் புகாரை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.