மும்பை: சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பாதுகாப்பு வாகனங்களை (அவசியமான பாதுகாப்பைத் தவிர) தவிர்த்து, புல்லட் மோட்டார் சைக்கிளில் முதல்வர் அலுவலகத்துக்கு சென்றார்.
மேற்காசிய நாடுகளில் நிலவும் நெருக்கடியின் எதிரொலியாக பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கான முன்னுதாரணமாக தமது பாதுகாப்பு வாகனங்களின் பயன்பாட்டையும் அவர் குறைத்ததாக கூறப்படுகிறது.
இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் சிக்கன நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மஹாராஷ்டிராவில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரடியாக பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களை பட்னவிஸ் ரத்து செய்துள்ளார்; அரசு ஊழியர்களுடனான கூட்டங்களை இணையவழியில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புதிய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எரிபொருள் வாகனங்களை விட மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக, வர்ஷா இல்லத்திலிருந்து புல்லட்டில் அவர் முதல்வர் அலுவலகத்துக்கு புறப்பட்டார்; உடன் அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் சென்றார்.
இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அவர் சென்ற வாகனத்தின் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் காலாவதியானதாகவும், விளம்பரத்திற்காகவே புல்லட்டில் சென்றதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.





