சென்னை: முதல்வர் விஜயின் நெருங்கிய ஜோதிடராக கூறப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவருக்கு, முதல்வரின் அரசியல் பிரிவில் சிறப்பு அதிகாரியாக அரசு பணி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நியமனத்திற்கு, தமிழக வெற்றிக் கழக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பொறுப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட விமர்சனம் கட்சிக்குள் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ரோமப் பேரரசர் கலிகுலா தன் விருப்பக் குதிரையான ‘இன்சிடாடஸ்’க்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு அளித்ததாக கூறப்படும் வரலாற்றுக் கதையை மேற்கோள் காட்டி, “கலிகுலா இன்சிடாடஸ்” என்ற வாசகத்துடன் அவர் விமர்சித்துள்ளார்.

ஆட்சி அமைக்க விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், இவ்வாறு வெளிப்படையாக விமர்சித்தது கட்சிக்குள் கருத்து மோதலையும் நிலைப்பாடு குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.