கேரளாவின் புதிய முதல்வர் பெயர் மே 14ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று புதுடில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளது. ஆனால் முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்ற விவகாரத்தில் கட்சிக்குள் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்தது.
கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதாலா ஆகிய மூவரிடையே போட்டி நிலவியதால் ஆலோசனைகள் தீவிரமடைந்தன. அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து டில்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடக் குழுவினர் கேரளா வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு வெளியாகவில்லை.
பின்னர் மூவரையும் டில்லிக்கு அழைத்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சி தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அனைத்து ஆலோசனைகளுக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டு மே 14ல் அறிவிக்கப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.





