சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு, எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு கான்வாயில் இடம்பெறும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளார்.
இஸ்ரேல்–அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், எண்ணெய் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் உள்ளிட்டவற்றில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க மக்கள் எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் அண்மையில் வலியுறுத்தினார். பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை, தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், உள்நாட்டு சுற்றுலாவுக்கு ஊக்கம், அன்னிய செலாவணி கையிருப்பை நிலைநிறுத்த அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்த்தல் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். மேலும் நிறுவனங்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நடைமுறையை செயல்படுத்தவும், பள்ளி–கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தாமே முன்மாதிரியாக இருக்க கான்வாய் வாகன எண்ணிக்கையை குறைத்தாலும் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.) தெரிவித்துள்ளது. ‘ப்ளூ புக்’ பாதுகாப்பு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக இயன்றவரை மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதுடன், இதற்காக புதிதாக மின்சார வாகனங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கன நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களும், டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ. ஆளும் மாநில முதல்வர்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். டில்லியில் சில அமைச்சர்கள் மெட்ரோவில் பயணிக்க ஆரம்பித்துள்ள நிலையில், உத்தரகண்ட் மாநில அமைச்சர் கணேஷ் ஜோஷி ஆடம்பர காரை தவிர்த்து இருசக்கர வாகனத்தில் தலைமை செயலகத்திற்கு செல்ல தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





