பெங்களூருவில் நடைபெற்ற ஆன்மிகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் வாழும் கலை ஆசிரமத்தின் 45வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், “மனித வாழ்வு மகத்தானது; அதை வீணாக்காதீர்கள்” என்று வலியுறுத்தினார். மேலும், கர்நாடகாவில் பிறந்து வளர்ந்ததாகவும், பின்னர் சென்னைக்கு சென்றதால் கன்னடத்தில் பேச வாய்ப்பு குறைந்தாலும் மொழியை மறக்கவில்லை என்றும் கூறினார்.
ஆசிரமத்திற்கு முதல் முறையாக வந்தபோது அதன் அழகும், அங்குள்ளவர்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் தன்னை ஆச்சரியப்பட வைத்ததாக அவர் நினைவுகூர்ந்தார். இரண்டு நாட்கள் தங்கலாம் என்று வந்தது 15 நாட்களாக நீண்டதாகவும், அங்கு உள்ள இரண்டு குதிரைகளில் ஒன்றுக்கு “ரஜினி” என்ற பெயர் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு மாலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஆயிரக்கணக்கான பக்தர்களை சந்திக்க சென்றபோது, வழக்கம்போல் தன்னை பார்த்து கோஷமிடுவார்கள், புகைப்படம்/ஆட்டோகிராப் கேட்பார்கள் என்று எதிர்பார்த்ததாக அவர் சொன்னார். ஆனால் யாரும் தன்னை கவனிக்கவில்லை; கை அசைத்தும் யாரும் பார்க்காதது “என் ஈகோவை நொறுக்கிவிட்டது” என்று அவர் தெரிவித்தார். இதை ஆன்மிகத்தின் சக்தி எனக் கூறிய அவர், சினிமா புகழ் வரவும் போகவும் செய்யும்; ஆன்மிகத்தில் கிடைக்கும் மதிப்பு நீடிக்கும் என்றும், நல்ல குரு கிடைப்பது அரிது; தன்னிடம் ஸ்ரீஸ்ரீ ஒரு அருமையான குருவாக இருப்பதாகவும் பேசினார்.




