தமிழ்நாடு சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்பதைத் தடை செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.

சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில், முன்னாள் திமுக அமைச்சர் பெரியகருப்பனை சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முடிவை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, தொகுதிக்குரிய தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்தது. இதை எதிர்த்து சீனிவாச சேதுபதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இவ்வாறு செயல்பட்டிருக்கக் கூடாது என்றும், அதன் அணுகுமுறை “கடுமையானது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கில் மேலதிக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்துக்கும் தடை விதித்தனர்.

மேலும், தேர்தல் ஆணையம் மற்றும் பெரியகருப்பன் தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.