புதுடில்லி: தமிழகம், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கட்டங்களைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) 3ம் கட்டமாக மேலும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், காலமானவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் வாக்காளராக பதிவு செய்தவர்கள் போன்ற தகுதி இல்லாத பதிவுகளை கண்டறிந்து நீக்கும் நடவடிக்கையாக இந்த திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

3ம் கட்ட எஸ்ஐஆர் நடைபெறும் பகுதிகள்: ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுடில்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட்.

தேர்தல் கமிஷன் தகவலின்படி, அரசியல் கட்சிகளின் 3.42 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் உதவியுடன், 3.94 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சுமார் 36.73 கோடி வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்திக்க உள்ளனர். இந்த பணிகள் மே 30 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும்; வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 5 முதல் அக்டோபர் 21 வரை வெளியிடப்படும்.

முன்னதாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளில் 5.18 கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கமிஷன் தெரிவித்தது.