சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் மற்றும் பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த மனுக்களை விசாரிக்கும் போது, ஒருவர் ஹிந்து என நிரூபிக்க கோவிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 15வது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத விவகாரங்களில் நீதிமன்ற தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை சட்டசபைகள் மூலம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதற்கு நீதிபதி ஜாய்மால்யா பக்சி, அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை மீற முடியாது என்றும், பெரும்பான்மையினர் விரும்பினாலும் அது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா என்பதை சோதிப்பதே நீதிமன்றத்தின் கடமை என்றும் கூறினார்.

பெண் ஆதரவாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகன் கோபால், மதங்களுக்குள் சமூக நீதிக்கான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என வாதிட்டார். அதற்கு நீதிபதி பி.வி.நாகரத்னா, ஹிந்து மதம் வாழ்க்கை முறை என அழைக்கப்படுவதற்குக் காரணம் இதுவே என்றும், ஹிந்துவாக இருப்பதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் அல்லது சடங்குகளை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டார். தலைமை நீதிபதி சூர்ய காந்த், வீட்டில் அமர்ந்து ஒரு விளக்கை ஏற்றினாலே நம்பிக்கையை வெளிப்படுத்த போதுமானது; அதற்கு மேலாக வேறு ஒன்றும் அவசியமில்லை எனச் சொன்னார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஒரு மத நடைமுறை பகுத்தறிவானதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கக் கூடாது என்றும், நீதிபதிகள் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் பழக்கங்களை முற்போக்கானது/பிற்போக்கானது என வகைப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதற்கு தலைமை நீதிபதி, நீதிமன்றமோ அல்லது மதத் தலைவரோ உயர்ந்த ஆன்மிக அதிகார மையமாக மாறத் தொடங்கினால் சிக்கல்கள் உருவாகும் என்றும், சட்டசபை சீர்திருத்தம் கொண்டு வந்தால் அது மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக நீதிமன்றம் கருதும் என்றும் தெரிவித்தார். விசாரணை வியாழனன்றும் தொடர்கிறது.