சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன்படி, அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1 முதல் 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாநிலத்திலும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும், இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.